அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் காரில் கிரிவலம் வந்தார்.
இதையடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வரும் 15ஆம் தேதி கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்து அன்று மாலையே தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன். அமமுகவிற்கு இந்தத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சியினருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
கடம்பூர் ராஜு வாகன சோதனை செய்த அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தது அதிகார துஷ்பிரயோகம். கோவில்பட்டி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்' என்றார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் காட்டுவதாகவும்; அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு ஏற்கெனவே நீதிமன்றங்கள் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து தெரிவித்து வருவேன் என்றும், அதிமுக ஊழல்களை வரிசைப்படுத்துவதைவிட, கரோனா காலத்தில் எத்தனை ஊழல்கள் நடைபெற்றது என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், எடப்பாடி ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் என டிடிவி தினகரன் விமர்சித்தார்.
மேலும், ஆட்சி உள்ளவரை மட்டுமே அதிமுக இருக்குமென்றும்; அதிமுகவின் உண்மை தொண்டர்கள் அமமுகவில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார்.
சசிகலா அரசியலுக்கு மீண்டும் வரவேண்டும் என நான் வற்புறுத்துவேன் என்றும்; ஊழல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்தப் பலனும் இல்லை என்றும், மாறாக, மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தால் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள் எனவும் டிடிவி தினகரன் பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதாகவும், அதேவேளையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அதிமுக பண மூட்டைகளை நம்பி தேர்தலில் நிற்பதாகவும், மக்களுக்குப் பணம் எங்கிருந்து வந்தது எனத்தெரியும் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.
இதையும் படிங்க: திமுகவில் அடிமையாக இருக்க விரும்பவில்லை' - பாஜக சரவணன்