திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கள்ளச்சாராய விற்பனை குறித்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்ட அந்த இளைஞர், தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவப்பிரகாஷ். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவப்பிரகாஷ் கடந்த பல மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் ஆட்டோ ஓட்டும் பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை போலீசார் சிவப்பிரகாஷை, கள்ளச்சாராய விற்பனை குறித்து விசாரணை செய்ய வேண்டும் என திருவண்ணாமலையில் உள்ள கலால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட சிவப்பிரகாஷ் மீது கலால் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறிய நிலையில், கழிவறை சென்று வருவதாக சிவபிரகாஷ் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.56 லட்சம் மோசடி- பெங்களூரு தம்பதி சிக்கியது எப்படி?
தொடர்ந்து கலால் காவல் நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்ற சிவபிரகாஷ், அங்கு வைத்திருந்த ஆசிட்டை (Acid) எடுத்து குடித்து விட்டதாக கழிவறையில் கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிவப்பிரகாஷை மீட்ட கலால் போலீசார், உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விசாரணைக்காக கலால் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட வாலிபர் ஆசிட் குடித்த தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கணவனைக் கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசிய மனைவி.. 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?