திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று கடந்த 7 ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருந்தார். ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற 80ஆயிரம் பேருக்கு பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை வழங்கிட அரசிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் போனது.
இதனிடையே, கடந்த 7ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி சான்றிதழை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு தனது சான்றிதழை ஒப்படைத்தார். இந்நிலையில், நேற்று (செப்.29) இருசக்கர வாகனத்தில் சென்ற சிரஞ்சீவி எதிரில் வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், அவருடன் படித்த இளைஞர்கள் சிரஞ்சீவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி இதய அஞ்சலி செலுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மறைந்த சிரஞ்சீவியின் குடும்பத்திற்க்கு அரசு உதவி செய்யவேண்டும்.
ஆசிரியர் தேர்வெழுதி வெற்றிபெற்றும் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசு விழிப்புணர்வு ஓவியத்தை அழித்து திருமாவளவனின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கைது