திருவண்ணாமலை: ஆரணியில் கடந்த பத்தாம் தேதி அன்று கைத்தறி பட்டு நெசவு சேலை உற்பத்தியாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி, ஊர்வலமாகச் சென்று, ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கைத்தறி ரகங்களை விசைத்தறியில் (பவர்லூம்) உற்பத்தி செய்வதை தடை செய்ய, ஒதுக்கீட்டு சட்டம் 1985-ஐ அமல்படுத்த வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் தனலட்சுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து பேசும் போது, மாவட்ட ஆட்சியரிடமும், அரசாங்கத்திடமும் பவர்லூமில் கைத்தறி நெசவு சேலை உற்பத்தி செய்வதைத் தடை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்த பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால், இன்று வரையிலும் எந்தவித நடவடிக்கையும் யாரும் எடுக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட கைத்தறி பட்டு நெசவு உற்பத்தியாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி, ஆரணி டவுன் பஜார் வீதியில் உள்ள மணிக்கூண்டு அருகில் பவர்லூமில் கைத்தறி பட்டு நெசவு சேலைகள் உற்பத்தி செய்வதைத் தடை செய்ய வலியுறுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆரணி டவுன் பஜார் வீதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 10 மணியளவில் தொடங்கப்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சி.ஐ.டி.யூ பொது செயலாளர் இ.முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது பேசிய அவர், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி, விசைத்தறியில் (பவர்லூம்) பட்டு சேலைகளை உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும், சட்டத்தை மீறும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும், விற்பனையாகாமல் இருக்கும் பட்டுச் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் இரா.பாரி, மாவட்ட துணைத்தலைவர் எம்.வீரபத்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.கண்ணன், சி.அப்பாசாமி உள்பட நெசவாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பட்டு சேலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி தாலுகா நெல், அரிசி வியாபாரிகள் சங்கம், பல சரக்கு வியாபாரிகள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம், சிறு குறு பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கம், தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 36 அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்தன.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோற்றில் முழு பூசணிக்காய் மறைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்!