நாடு முழுவதும் கரோனா தீநுண்மி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள், 144 தடையை பிறப்பித்து பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதேபோல் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசமமில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சிக்குள்பட்ட செங்கம் சாலை அரசு கலைக்கல்லூரி அருகே 25ஆவது வார்டு ஏரிக்கரை பகுதியில் திமுக கட்சியைச் சார்ந்த தொழிலதிபர் ரமணா, பழனி - ஸ்ரீதேவி தலைமையில் தனது சொந்த செலவில் 650 குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள், முகக்கவசம், கையுறை, சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் பா. கார்த்திக்வேல் மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 650 குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் குழுத் தலைவர் குட்டி புகழேந்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஷெரீஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தினமும் ஒவ்வொருவரும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், தங்களது வீடுகளைச் சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க:
தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!