திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ரெட்டியர் பாளையம் பகுதியில் வசித்து வருபர்கள் தனபால், அவரது மகள் கெங்கையம்மாள்.
இவர்கள் இருவரும் தனித்தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், தனபாலின் வீடு தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. பின்னர் தீ மளமளவென பரவி கெங்கையம்மாள் வீட்டிற்கும் பரவத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் இரண்டு வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது.
பின் சம்பவ இடத்திற்கு வந்த தானிப்பாடி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததுள்ளது என்றும், தீவிபத்தில் தனபாலின் வீட்டிலிருந்த ஐந்து லட்சம் ரொக்கப் பணம், மூன்று சவரன் நகை, ரேஷன், ஆதார் அட்டைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தங்களது பணம், நகை, பொருள்கள் அனைத்தும் தீயில் கருகியதால் இனி எங்களது வாழ்வாதாரத்திற்கு நாங்கள் எங்கே செல்வது என கதறி அழுது தமிழ்நாடு அரசு எங்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தேனி வனப்பகுதியில் காட்டுத் தீ - அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்