திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டைவர்சன் தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற மருத்துவர் சிவனேசன் (77). இவர் தற்போது தனது வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (மே.07) காலை மருத்துவர் வீட்டில் வேலை செய்யும் பழனி என்பவர், மருத்துவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்ததை கண்டு பழனி அதிர்ச்சி அடைந்தார். பின் இதுகுறித்து உடனடியாக மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த மருத்துவர், வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 36 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் 1 லட்சம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, போளூர் காவல் நிலையத்தில் சிவனேசன் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேக்கம் கிளீனருக்குள் 251 கிராம் தங்கம்... ஒருவர் கைது!