திருவண்ணாமலை: ஆரணி டவுன் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் மாணவ மாணவிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் பயின்றுவருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் பணியாற்றிவருகின்றனர்.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் ஒமைக்ரான், கரோனா தொற்று அதிகரித்துவருவதால் தமிழ்நாடு அரசு 1-8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடைவிதித்துள்ளது.
ஆனால் 9, 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11, 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 5) 9ஆம் வகுப்புப் படிக்கும் 150 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை பள்ளியிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 6) பரிசோதனையின் முடிவில் 9ஆம் வகுப்புப் படிக்கும் மூன்று மாணவர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் 9, 10, 11, 12 ஆகிய பள்ளி மாணவ மாணவிகளை உடனடியாக இரண்டு நாள்கள் விடுமுறை அளித்து அனுப்பிவைத்தனர். ஆரணியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மூன்று மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீராங்கனை Chakda Xpress அனுஷ்கா!