திருவண்ணாமலை நகரின் போளூர் சாலையிலுள்ள, ஜேகே ஆட்டோ ஏஜன்ஸி யமஹா ஷோரூமில் நேற்று காலை வழக்கம்போல் கம்பெனியை திறக்க வந்த பணியாளர்கள் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு, லாக்கரில் இருந்த பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஷோரூம் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் இரும்பு கம்பிகளை உடைத்து, சிசிடிவி கேமரா ஒயர்களை அறுத்தெறிந்து விட்டு, கம்பெனியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் 3.5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில், நகர குற்றப்பிரிவு காவல் துறையினர் விரைந்து வந்து யமஹா ஷோரூமில் சோதனை செய்து, விசாரணை மேற்கொண்டு, கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். நகரப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள யமஹா ஷோரூமில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.