திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, “இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும், பக்தர்களின் வசதிக்காக 2ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படும்.
கிரிவலப் பாதையைச் சுற்றி, ஒன்பது இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும். பக்தர்களுக்குக் கொடுக்கப்படும் நுழைவுச்சீட்டில், பார்கோட் பதிவிட்டு வழங்கப்படும். அன்னதானம் வழங்குபவர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து, முன் அனுமதி பெறவேண்டும். கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி.
கோயில் வளாகத்தில் ஏற்கனவே 150 கண்காணிப்புப் படக்கருவிகள் உள்ளன. மேலும், இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” எனக் கூறினார்.