திருவண்ணாமலை: தானிப்பாடி அடுத்த மலமஞ்சனூர் பகுதியில் 200 ஆண்டுகளாக 13 கிராமங்களைச்சேர்ந்த குரும்பர் இன மக்கள் வழிபட்டு வந்த ஒன்பது ஐம்பொன் சிலைகள் மற்றும் ஒரு வெண்கல சிலை என 10 சிலைகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானிப்பாடி அடுத்த மலமஞ்சனூர் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் சித்தப்படையாள் சுவாமியை 13 கிராமங்களைச் சேர்ந்த குரும்பர் இன மக்கள் சுமார் 200 ஆண்டுகளாக வழிபட்டு வந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய மூதாதையர்கள் வழங்கிய ஐம்பொன் சிலைகளை வைத்து, ஆனி மாத பௌர்ணமியில் விழா எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஐம்பொன் சிலைகளை மலையடிவாரத்தில் இருந்து வெளியே எடுத்து வழிபட்ட 13 கிராம மக்கள் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, தற்போது ஐம்பொன் சிலைகளை எடுத்து வழிபட சென்றபோது ஐம்பொன் சிலைகள் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்ற நபர்களைக் கண்டறிந்து சிலைகளை மீட்டுத் தருமாறு 13 கிராமங்களைச் சேர்ந்த குரும்பர் இன மக்கள் தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தானிப்பாடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூரில் ரூ.50 கோடி நில மோசடி; சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது