திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் மூன்று சக்கர வாகனத்தில், சாராயம் கடத்துவதாக வந்த தகவலின்படி மதுவிலக்கு காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 35 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி விற்பனைக்காக வைத்திருந்த திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விமல், பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோன்று செங்கம் பகுதியில் மதுவிலக்கு தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர், தீத்தாண்டப்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்க முயன்ற ஏழுமலை மற்றும் தினகரன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக போளூர் வட்டத்தில் உள்ள அத்திமூர், நவாப்பாளையம், ஆதமங்கலம் புதூர், வின்னுவாம்பட்டு ஆகிய பகுதிகளில் நடத்திய அதிரடி வேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 325 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கள்ளச்சாராயம் கடத்திய சின்னராஜ், கோவிந்தன், சாமிக்கண்ணு, விக்னேஷ், குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள பீமாரப்பட்டி, ஆத்திப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 320 லிட்டர் கள்ளச்சாராயத்தை கடத்தி, விற்பனைக்காக வைத்திருந்த வெங்கட்ராமன், வேல்முருகன், ராமன், காந்தி, விஜி, ஏழுமலை, பழனி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சாராயம் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆரணி வட்டத்தில் உள்ள கஞ்சாம்பாறை காட்டுப்பகுதியில் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கமண்டல நதி ஆற்றுப்பாலம் அருகே 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 பேரல்கள் என மொத்தம் 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இதுபோல் கடந்த ஒரு மாத காலமாக 144 தடை உத்தரவின்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து மாவட்ட காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இந்த நடவடிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் கள்ளச்சாராய வியாபாரிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது காவல் துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கால் சாலைகளில் சுதந்திரமாக நடமாடும் வனவிலங்குகள்!