திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு குடோனில் தடைசெய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. நகராட்சி அலுவலர்கள் அங்கு ஆய்வு நடத்தியதில் சுமார் 540 கிலோ பதுக்கி வைக்கப்பட்ட தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினர். பிறகு குடோனின் உரிமையாளருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காயிதேமில்லத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது. இந்நிலையில், அங்கு சென்றபோது அந்த வீட்டின் பின்புறமாக உள்ளே பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை மர்ம நபர்கள் வெளியே கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். அங்கு காவல்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் திடீரென சென்றதால் மர்ம நபர்கள் மூட்டையை அங்கேயே போட்டுவிட்டு தலைமறைவாகினர்.
பிறகு நகராட்சி ஆணையர் சுரேந்திரன் முன்னிலையில் வீட்டின் உரிமையாளரை வரவழைத்து வீட்டைத் திறந்து பார்த்தபோது அங்கு தடைசெய்யப்பட்ட இரண்டரை டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.