கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 124 பேர் மும்பையில் வாழ்வாதாரம் பாதித்து சிக்கித் தவித்தனர். அதையடுத்து அவர்களைத் தமிழ்நாடு அரசு சொந்த ஊர்களுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தது. அதன்படி அவர்கள் மும்பையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
அங்கு வந்த அவர்களைத் திருவண்ணாமலை வட்டாட்சியர் அமுலு தலைமையிலான அலுவலர்கள் நான்கு பேருந்துகள் மூலம் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டுசென்றனர்.
இது குறித்து அலுவலர்கள், "124 பேருக்கும் கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்படவுள்ளது. அதில் தொற்று உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் அவரவர் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தி.மலையில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா உறுதி!