திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(24). இவர், இன்று (டிசம்பர் 13) தனது நண்பர்களுடன் புன்னப்பாக்கம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். அப்போது கிரிக்கெட் பந்து அவரது மார்பு பகுதியில் பட்டது.
இதனால் மயங்கிய லோகநாதனை, அங்கு விளையாடி கொண்டிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லோகநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள லோகநாதனின் உடலை உடனடியாக உடற்கூராய்வு செய்து கொடுக்குமாறு அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நாளை (டிசம்பர் 14) காலை உடற்கூராய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தரப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர் கிரிகேட் பந்து மார்பு பகுதியில் பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்