கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு பகுதியில் காவல் நிலையம் அருகே கூட்டு சாலையில் கடந்த 26ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நரசிங்கபுரம் செல்லவேண்டும் என ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவருடன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாகச் சென்றது. இதனால், ஆட்டோவிலிருந்த பெண் கத்தியுள்ளார். இவரது அலறல் சத்தத்தைக் கேட்ட இளைஞர்கள் யாகேஷ் (22), ஈஸ்டர் (19), வினித், துரைராஜ், சார்லி ஆகியோர் தங்களது இருசக்கர வாகனங்களில் ஆட்டோவை விரட்டிச் சென்றனர்.
இந்நிலையில், ஆட்டோவிலிருந்து இளம்பெண் தப்பி சாலையில் விழுந்தார். இதன்பின்னரும் ஆட்டோவை விரட்டிச் சென்றபோது, இருசக்கர வாகனங்களை ஆட்டோவை வைத்து இடித்துள்ளது. அந்தக் கடத்தல் கும்பல் இதில் கீழே விழுந்த தியாகராஜன், மகன் யாகேஷ் படுகாயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த யாகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எனது பிறந்தநாளை கொண்டாட விருப்பமில்லை - கனிமொழி எம்.பி.