திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம், இருளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி அம்மாள் (வயது 75). இவர் நேற்று (செப்.17) மதியம் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற இளைஞர் ஒருவர், மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார்.
இதனையடுத்து மூதாட்டி குரலெழுப்பிக் கத்த அதில் பயந்துபோன அந்த இளைஞர், கையில் தான் வைத்திருந்த துண்டால் மூதாட்டியின் வாயை அடைத்து, அவரைத் தர தரவென இழுத்துச் சென்றுள்ளார். ஆனால் மூதாட்டி விடாமல் சத்தம்போட முயற்சித்ததில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அவரை சரமாரியாக அடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மூதாட்டியின் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்க, அதற்குள் அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த நபர் அங்கிருந்து முட்புதர்கள் வழியாக புகுந்து தப்பியோட முயன்றுள்ளார்.
அதைப் பார்த்த பொது மக்கள், அந்நபரை விடாமல் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இதில் அந்த இளைஞர் பயந்துபோய் மயக்கமடைந்தது போல் நடித்ததை அடுத்து, வெள்ளவேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மயங்கியபடி இருந்த அவரையும், காயமடைந்த மூதாட்டியையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.