திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது முகத்துவாரம் ஆகும். இந்த முகத்துவாரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல் புகுந்து அடைபட்டது. இது குறித்து மீனவ மக்கள் சார்பில் அரசுத் துறைகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீன்வளத் துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் மீன்வளத் துறை உதவி இயக்குநராகப் பணிபுரியும் பஞ்ச ராஜா பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும்வகையில் பழவேற்காடு மீனவர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள், மீனவக் கிராம நிர்வாகிகளைச் சந்தித்தார்.
![works postponed in estuary at Pazhaverkadu due to corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7774436_thumb.png)
பழவேற்காடு மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் நாராயணன், துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பேசிய பஞ்ச ராஜா, "பழவேற்காடு முகத்துவாரத்திற்கு நிரந்தர தீர்வுகாணும் பொருட்டு ரூ.27 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக மக்கள் கருத்துகேட்புக் கூட்டமும் அதைத்தொடர்ந்து பல்வேறு பணிகளும் நடக்கவிருந்த சூழலில் தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்ததும் இந்தப் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன" எனக் கூறினார்.
மேலும் ரூ.350 கோடியில் பழவேற்காடு பகுதிக்கு மீன்பிடித் துறைமுகமும், பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராமங்களுக்குப் படகு கட்டும் தளம் அமைக்க அரசுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தான் பணிசெய்த காலம்வரை முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தமைக்காகப் பழவேற்காடு மீனவ கிராம மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இதையடுத்து மீனவ கிராம நிர்வாகிகளும் அவருக்கு மரியாதை செய்து வழி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க... பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் நிறைவு!