திருவள்ளூர் மாவட்டம் கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஏசுகுமார்(28). இவர் திருவேற்காடு அடுத்த கோலடியில் உள்ள அலுமினியம் கம்பெனியில் வேலை செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் சீர்காழியைச் சேர்ந்த சிலம்பரசன்(25), ரகு ஆனந்தன்(24) ஆகியோரும் வேலை செய்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த ஊழியர்களிடம் ஏசுகுமாரை பற்றி இருவரும் தவறாகப் பேசியுள்ளனர். இதையறிந்த ஏசுகுமார் இருவரிடம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும், சாப்பிடச் சென்றவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஏசுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக் கண்டதும் சிலம்பரசனும், ரகு ஆனந்தனும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில் குற்றவாளிகள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
இதையடுத்து இருவரையும் பிடிக்க நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து திருவேற்காடு காவல் துறையினர் சீர்காழியில் பதுங்கியிருந்த சிலம்பரசன், ரகு ஆனந்தன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிலம்பரசன், ரகு ஆனந்தன் ஆகியோர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 38 ஆண்டு சிறை!