கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த கௌதமி என்ற பெண் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்ததாக கூறி அஜித் என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த வழக்கில் அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவே கொலை செய்தார் எனக் கூறி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.
ஆனால் அந்த வழக்கில் திடீர் திருப்பமாக எனது கணவரை கௌதமி திட்டம் போட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துள்ளார் என அஜித்தின் மனைவி சிவன்யா மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளன.
அந்த மனுவில், கௌதமி தனது வாழ்க்கையில் பெண் என்ற பண்பாட்டு நெறிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் வாழ்ந்தவர் என்றும் திருநங்கை போல் இவர் திருநம்பியாக வலம் வந்தார் என கூறப்பட்டுள்ளது. கௌதமிக்கு ஆண்களைவிட பெண்களையே அதிகமாக பிடிக்கும் எனவும் அஜித்தின் தூரத்து உறவினர் என்பதால் அஜித்தின் மனைவி சுகன்யாவிடமும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் சுகன்யாவிடம் அஜித்தைவிட்டு விலகி என்னுடன் வந்து விடு நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் அப்படி இல்லை என்றால் உன்னை அஜித்துடன் வாழ விடமாட்டேன் என பலமுறை பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.
இதே நோக்கத்தில் அஜித்தை கடந்த 2ஆம் தேதி தனியாக வரவழைத்து திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அஜீத் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தார் என பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து சரியாக விசாரணை செய்யாமல் உடனடியாக அவரை விடுவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
ஆனால் தற்போது கௌதமியால் தனக்கு ஆபத்து உள்ளதாகவும் அவரிடம் இருந்து காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை முதலில் இருந்து முறையாக விசாரித்தால் மட்டும்தான் அவருடன் சேர்ந்து வேறு சில நபர்களும் கைது செய்யப்படலாம் எனவும் சுகன்யா புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.