விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு மின்சார சம்மேளனத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதன் மாநிலப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "மின்சார வாரியத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மின்சார வாரியம் ஊதியம் கொடுத்து, அவர்களை நிரந்தர ஊழியர்களாகப் பணியமர்த்த வேண்டும். மேலும் 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாகத் தொழிற்சங்கங்களுடன் பேசித் தீர்வுகாண வேண்டும். மின்சார வாரியத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. சட்டம் மூலம் மத்திய அரசு ஒரு தரப்பினரைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
கரோனா வைரசைத் தடுக்க தமிழ்நாடு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. உடனடியாக மாநில அரசு தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்கம்பங்கள் வழியாக தரையில் பாய்ந்த மின்சாரம் - வனவிலங்குகள் உயிரிழப்பு