திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செம்பேடு கிராமத்தின் அருகே தனியாருக்குச் சொந்தமான பண்ணை வீடு ஒன்று கட்டப்பட்டுவருகிறது.
இந்தப் பண்ணை வீட்டின் கட்டடப் பணிகளுக்காகத் தேவையான மணல், கொசஸ்தலை ஆற்றுப் படுகையிலிருந்து, சில அரசியல் பிரமுகர்கள் துணையுடன் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிவேகமாக மணல் கடத்திவந்த டிராக்டரை, இன்று செம்பேடு கிராம மக்கள் வழிமறித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வெங்கல் காவல் நிலைய காவல் துறையினர் வந்தனர். இந்தத் தொடர் மணல் திருட்டு குறித்து காவல் துறையினருடனும் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த பின்னர் பொதுமக்களிடமிருந்து டிராக்டரை மீட்ட வெங்கல் காவல் துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து, டிராக்டரையும் மணலையும் கைப்பற்றி அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர்களுடன் எடுத்த ஃபோட்டோவை காட்டி ரூ.25 லட்சம் மோசடி!