திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகில் ரமேஷ் என்பவர், தனது பட்டா நிலத்திற்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, அங்கு இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து கிராம மக்கள் திருத்தணி ஆர்டிஓ சத்யாவிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருத்தணி - பொதட்டூர்பேட்டை சாலையில் பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த போராட்டம்
2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, இறைச்சிக்கடை நடத்தி வருவதாகப் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிவித்தனர்.
போராட்டத்தில் கிடைத்த தீர்வு
இதனையடுத்து வருவாய்த்துறையினர் அந்த இறைச்சிக்கடைக்குப் பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்து, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கட்டப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை