திருவள்ளூர்: தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து இன்று அதிகாலை வரை கனமழையுடன் சூறாவளி காற்று வீசியது. மேலும் தொடர்ந்து மழை பொழிந்ததால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனை கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
முக்கிய சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமத்தில் உள்ள சித்தேரி கடும் மழையின் காரணமாக நிரம்பியது. இதனால் அதிக அளவில் வெளியேறும் வெள்ள நீரானது அருகே உள்ள தரைபாலத்தை முழுமையாக மூடியவாறு செல்கிறது.
இதனால் திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும் அதேபோல் மறு மார்க்கத்தில் இருந்து திருவள்ளூருக்கும் என இருபுறமும் வரும் வாகனங்கள் அனைத்தும் இப்பாலத்தை கடந்து செல்ல வேண்டி இருப்பதால், இன்று காலை 7 மணிமுதல் சுமார் 10 மணிவரை மூன்று மணி நேரம் இப்பகுதியில் பாலத்தைக் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதன் காரணமாக இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பாலத்தில் அதிக அளவு வெள்ள நீர் செல்வதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை வேறு வழிகளில் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் காலை வேளையில் வேலைக்குச் செல்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் தாக்கம்: பெட்ரோல் பங்க் சேதம்