திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த அகரம் கண்டிகையைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவர் நாள்தோறும் தமது நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்வதற்காக தமது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (ஏப்ரல் 15) காலை சென்றபோது, தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் காவல் துறையினர் இவரை தடுத்து காய்கறிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என தெரிகிறது. மேலும், இரண்டு மணி நேரமாக காக்க வைத்ததால், காவல் துறை கண்காணிப்பாளரின் வாகனம் முன்பு சாலையில் காய்கறிகளை எடுத்து வீசி எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, அவரை வெங்கல் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது போன்ற நிகழ்வு நடந்திருப்பதை கேள்விப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன், உடனடியாக அந்த விவசாயி வீட்டிற்குச் சென்று அப்துல் கலாம் புத்தகம் ஒன்றும், 50 கிலோ அரிசி, 25 கிலோ காய்கறிகளை அவருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.