தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று (மே 24) முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் இந்த பணியை வடக்கு மண்டல காவல் துறை தலைவர் சங்கர், நேரடியாக சென்று திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வாகன சோதனையின்போது காவல் துறையினர் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள், முன்களப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கபசுர குடிநீர் ஆகியவற்றையும் வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை கட்டுப்படுத்த ஆயிரத்து 400 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களிடமிருந்து 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "பொதுமக்கள் அனைவரும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும். இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும்" என்று கூறினார்.