திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட ஈச்சங்காடு மேடு கிராமத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, ஆரம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் செல்வது தெளிவாகப் பதிவாகி இருந்தது.
இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்
அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சோழவாரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அசோக் (18) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு (15 வயது ) பள்ளி மாணவிகள் தனக்கு இன்ஸ்டகிரம் என்ற இணையதள செயலி மூலம் நண்பர்களாக இருந்து வந்துள்ளதையும், இரு பள்ளி மாணவிகளையும் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (21) என்ற தனியார் கல்லூரி மாணவர், ஆபாசமாகப் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி அடிக்கடி பணம் பறித்து வந்ததுள்ளார்.
ஆத்திரப்பட்ட இன்ஸ்டாகிரம் நண்பர்
இவரின் தொல்லையைப் பொறுத்துக் கொள்ள முடியாத மாணவிகள் இருவரும் நடந்தவற்றை தன்னிடம் கூறி கதறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி, பிரேம்குமாரைக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, பணம் தருவதாக இரண்டு மாணவிகளும் செங்குன்றம் வரும்படி அழைத்தனர்.
இதனை நம்பி கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி, தனது நண்பரான பிரவீன்குமார் என்பவரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த பிரேம்குமாரை அசோக்கும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
கொடூரமாக கொலை
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் பிரவீன்குமார் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், தங்களது இரு சக்கர வாகனத்தில் பிரேம்குமார் பலவந்தமாகக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பின்னர் அவரைப் பட்டாக்கத்திகளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து சடலத்தை ஏரியில் புதைத்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலை தொடர்பாகப் பள்ளி மாணவிகள் இருவர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
மாணவ மாணவியர்கள் - நல்ல எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுங்கள்
மேலும், தமிழ்நாடு அரசு இது போன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், ஆபாச மிரட்டல்கள் மற்றும் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகளிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவே உதவி மையங்கள் மற்றும் புகார் எண்கள் போன்றவற்றை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இது போன்று அவசியமற்ற செயல்களினால் வரும் பாதிப்புகளைச் சந்திப்பதோடு மட்டுமில்லாமல், அதை எதிர்கொள்வதற்காக மற்றுமொரு பக்குவமற்ற செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தங்கள் குடும்பத்திற்கும் தங்களின் எதிர்காலத்திற்கும் நன்மைகளை தரப்போவதில்லை என்பதை மனதில் எண்ணிட வேண்டும்.
எனவே, தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை உரிய முறையில் பெற்றோர்களின் மேற்பார்வையில் அணுகுவதே அவைகளுக்குத் தீர்வாகும்.
இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் 14417- என்ற உதவி எண்ணுக்கு அழைத்து குறைகளைப் பதிவுசெய்யுங்கள்.
இதையும் படிங்க: 'தேவை போக்சோ விழிப்புணர்வு... அழையுங்கள் 14417 என்ற எண்ணுக்கு'