திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து அமைந்துள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் கவரப்பேட்டை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர எல்லையில் இருந்து தமிழ்நாடு நோக்கி நடைபயணமாக வந்த இருவரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதலளித்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த கைப்பையை காவலர்கள் சோதனையிட்டதில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின் அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த யுவராஜ் (18), பிரசாந்த் (16) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். பின் நீதிமன்ற உத்தரவின்படி காவல் துறையினர் யுவராஜை புழல் சிறையிலும் பிரசாந்தை பொன்னேரி துணை சிறையிலும் அடைத்தனர்.