திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதிவேகமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் ஆந்திர மாநில மதுக்கடையில் இருந்து மது வாங்கி தமிழ்நாட்டில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 108 மது பாட்டில்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் மதுபாட்டில்களையும், இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து மதுபாட்டிலை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கும்மிடிப்பூண்டி பெரிய சோழியம்பாக்கத்தை சேர்ந்த சிவா என்கிற பரமசிவம் (37), சென்னை, செங்குன்றத்தை சேர்ந்த காந்தராஜ் (32) என்பதும் தெரியவந்தது. இந்தக் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையின் இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.