திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா ஆலாடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொதுவிநியோக திட்ட ரேஷன் அரிசியை இரவு நேரத்தில் கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரியில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 100 மூட்டைகளில் ஐந்து டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுனரான திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன்(61), உதவியாளர் செல்வராஜ்(23) இருவரையும் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.