பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி, பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த ஒத்திகை முகாம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலுள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து துறைகளின் சார்பில் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டவர்களை கயிறுகள் மூலம் எவ்வாறு மீட்டு அவருக்கு முதலுதவி அளிப்பது குறித்ததான விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தப் பயிற்சியில் இயற்கை இடர்பாடுகள் வரும்போது, மீட்புக்குழுவினர் வருவதற்கு முன் நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 30இல் 11 ஏரிகள் முழுமையாக குடிமராமத்துப் பணிகள் முடிந்து தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை மூலம் சுமார் 526 பெரிய ஏரிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, பாதுகாப்பாக உள்ளதா என அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.
மீஞ்சூர் பழவேற்காடு போன்ற மீனவ கிராம மக்கள், கடலோரம் வசிக்கும் மக்களுக்கும் பெருவெள்ளம் வரும்பொழுது எவ்வாறு மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து மூன்றாயிரத்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : A.K 47 துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் மாவோயிஸ்ட் - வீடியோ வெளியாகி பரபரப்பு