பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கபடி போட்டிகள் கடந்த வாரம் கோவாவில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. இதில் தமிழக அணியில் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த உதயமான், தனுஷ், விஷால், கலைமுகிலன் ஆகிய நான்கு மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக அணி வீரர்கள் தேசிய சாம்பியன் பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்று வரலாற்று;ச் சாதனை படைத்தனர்.
இதனிடையே தமிழ்நாடு அணியில் இடம்பிடித்து திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் நான்கு பேருக்கும் பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி மேலாளர் சத்யநாராயணா பங்கேற்று சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். பின்னர் பள்ளியின் சக மாணவர்களும் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் பள்ளி முதல்வர் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கபடி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று இந்தியாவிற்கும் பிறந்த ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை தேடித்தருவோம் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.