வேலூர்: சத்துவாச்சாரி அருகேயுள்ள செங்காநத்தம் மலையில் வனத்துறை சார்பில் காப்புக்காடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த காப்புக்காட்டில் செம்மரம், தேக்கு, புங்கன், வேம்பு போன்ற மரங்கள் வளர்ந்துள்ளன.
போக்குவரத்து பகுதி என்பதால், காப்புக் காட்டிலிருக்கும் மரங்களை வெட்டிக் கடத்துவது, எளிதான காரியம் கிடையாது. வனத்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால், மலைக்கு நடுவில் அமைந்திருக்கும் பட்டா நிலங்களிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன.
இந்நிலையில், டிச.10ஆம் தேதி இரவு, மேல் செங்காநத்தம் முருகன் கோயில் அருகிலிருக்கும் பட்டா நிலத்துக்குள் புகுந்த இரண்டு பேர் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். சத்தம்கேட்டு, அதே ஊரைச் சேர்ந்த இளங்கோ என்பவர் நண்பர்கள் சிலருடன் சென்று பார்த்துள்ளார். ஊர்க்காரர்களைப் பார்த்ததும், மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து, தர்ம அடி கொடுத்துள்ளனர்.
தகவலறிந்ததும், சத்துவாச்சாரி காவல்துறையினர் செங்காநத்தம் மலைக்கு விரைந்து சென்று, கிராம மக்களின் பிடியிலிருந்த இரண்டுப் பேரையும் மீட்டனர். விசாரணையில், இருவரும் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சுதாகர் (45), சாம்ராஜ் (43) என்பது தெரியவந்தது.
இருவரையும் வனத்துறையினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். வழக்கமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஆந்திர மாநிலம் சென்று செம்மரக் கடத்தலில் சிக்குவார்கள். இப்போது, அங்கிருந்து தமிழ்நாடு வந்தும் கடத்த முயன்ற இருவர் சிக்கி உள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிவு - உரிமையாளர் மரணம்