திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 13ஆம் அணி சார்பில் கட்டாய தலைக்கவசம் அணிவதன் அவசியம், பாதுகாப்பு குறித்த மெகா விழிப்புணர்வுப் பேரணி மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கவாத்து மைதானத்திலிருந்து புறப்பட்ட இந்த வாகனப்பேரணி ஆவடி பேருந்து நிலையம், ஆவடி சோதனைச் சாவடி என முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் சிறப்பு காவல்படை வீரர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக சாலை விதிகளை பின்பற்றுதல், தலைக்கவசம் அணிதல் உள்ளிட்டவை குறித்து வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அறிவுரை வழங்கினர்.
சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்துநிறுத்தி அறிவுரை வழங்கியதோடு துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.