திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடி ஒன்று உள்ளது.
இங்கு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபி ஆபாஷ் குமார், கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோரின் ஆணையின்படி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, சென்னை ஆய்வாளர் முகேஷ் ராவ், திருவள்ளூர் ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு, செய்தியாளரைச் சந்தித்த அவர், "வெளிமாநிலங்களிலிருந்து மொத்த வியாபாரிகள் இடைத்தரகு முறையில் இடைத்தரகர்கள் நெல்லை குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்கின்றனர்.
அதன்மூலம், தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மற்றும் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநில எல்லைகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இதில், தமிழ்நாடு அரசு விதிமுறைகளைப் பின்பற்றாத வியாபாரிகளிடமிருந்து நெல் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு விவசாயிகள் பயனடைவார்கள்" எனக் கூறினார்.