திருவள்ளூர் மாவட்டம், மாங்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து, பின்னர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அணிந்திருந்த ஏழு சவரன் நகையை அடையாளம் தெரியாத மூன்று பேர் பறித்துச் சென்றனர். இதுகுறித்து, மாங்காடு காவல்துறையினர் சிசிடிவி கேமிரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த கார்மேகம், வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, அவரது கணவரின் உறவினர் போல வீட்டிற்குள் சென்று மிரட்டி அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்வதும், பின்னர், கொள்ளை நகையை அடமானம் வைத்து அதிகளவில் கஞ்சா வாங்கி புகைத்தும், காவலர்களிடம் சிக்காமல் இருக்க வண்டலூர் -மிஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரத்திலேயே தங்கியதும் தெரியவந்தது.
கைதானவர்களிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்கள், கத்திகள், நான்கு சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.