உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சந்தேகிக்கப்படும்படி சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் டில்லி சென்று திரும்பிய காரணத்தால் அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவருடைய மனைவி, மகன் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூவரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மேலும், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், குடியிருப்புக்கு அருகில் உள்ள ஜெ.பி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க தாய், 20 வயது மகன், 15 வயது மகள், மற்றொருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: பரிசோதனை மேற்கொள்வதே ஒரே தீர்வு