திருவள்ளூர்: திருத்தணி மாருதி நகரில் வசித்து வந்தவர் சஞ்சீவ் ரெட்டி (65). இவர் தனது மனைவி மாலாவுடன் வசித்து வந்தார். திருத்தணி பகுதியில் ஏலச்சீட்டு, பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தங்கை மகன் ரஞ்சித் குமார் (28).
இவரிடம் சஞ்சீவ் ரெட்டி அன்பு காட்டிவந்தார். இந்நிலையில், திருத்தணியில் ஸ்வீட் கடைகள் நடத்தி வரும் ரஞ்சித்குமாரின் வியாபாரத்திற்கு சஞ்சீவ் ரெட்டி பண உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த 29ஆம் தேதி முதல் சஞ்சீவ் ரெட்டியின் செல்போன் ஸ்விச் ஆப் ஆனதால் பட்டாபிராமபுரத்தில் வசிக்கும் அவரது தம்பி பாலு சஞ்சீவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு பூட்டியிருந்த நிலையில் பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தன.
இதனால் சந்தேகமடைந்த அவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் காணாமல்போன சஞ்சீவையும் அவரது மனையியையும் தேடி வந்தனர்.
சஞ்சீவ்வின் செல்போன் சிக்னல் கடைசியாக சித்தூர் மாவட்டத்தில் காட்டியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், செல்போனில் அவர் கடைசியாக பேசிய ரஞ்சித்குமாரை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.
பணத்துக்காக வெறிச்செயல்
இந்த விசாரணையில் தனது வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால், ரஞ்சித்குமார் சஞ்சீவையும் அவரது மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று இருவரையும் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். வழியில் சிக்கராஜபுரம் காலனியைச் சேர்ந்த ராபர்ட், விமல் ராஜ் ஆகிய இரு நண்பர்களின் உதவியுடன் இருவரையும் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு உடல்களை ராமச்சந்திராபுரம் காட்டில் புதைத்துள்ளார்.
சித்தூர் காட்டுப் பகுதியில் சஞ்சீவ் பயன்படுத்திய செல்போனை வீசியுள்ளார். இதன் பிறகு அவரது வீட்டிற்கு சென்று பீரோவில் வைத்திருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து ரஞ்சித் குமார், அவர் நண்பர்கள் உள்பட மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது!