திருவள்ளூர்: மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 25) காலை இறைவணக்கம் முடிந்ததும் தனது அறைக்குச் சென்ற மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து உயிரிழந்த திருவள்ளூர் 12ஆம் வகுப்பு மாணவியின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காஞ்சி சரக டி.ஐ.ஜி சத்திய பிரியா தலைமையில் 3 எஸ்பிக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி பயின்ற பள்ளியிலும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் நாராயண பாபு, பிரபு, வைரமாலா ஆகிய 3 மருத்துவர்கள் மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு காணொளி பதிவு மூலம் நடைபெற்று வருகிறது.
மாணவியின் பெற்றோர் தரப்பில் அவரது அண்ணன் சரவணன் ஒப்புதலுடன் இன்னும் சற்று நேரத்தில் மாணவியின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மாணவியின் உடல் திருத்தணி அடுத்த தெக்களுர் கிராமத்திற்குப் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இதையும் படிங்க: திருவள்ளூர் மாணவி உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்