திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு நரசிங்கபுரம் பகுதி உள்ளது. அங்கு வசிக்கின்ற மக்களின் குடிநீர் தேவைக்காக ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஐந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுக்கப்பட்டன. ஆனால் வறட்சி காரணமாக நான்கு கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டுபோனது. தற்போது ஒரு ஆழ்துளை கிணறில் கிடைக்கும் நீரானது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால், அப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
அது மட்டுமில்லாமல் அப்பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று அதிசக்தி வாய்ந்த போர்கள் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர் முற்றிலுமாக உறிஞ்சப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை தக்கோலம் நெடுஞ்சாலையில், உடனடியாக அந்த தனியார் நிறுவனம் மூடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அம்மக்களோ, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இங்கு வந்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வை கொடுப்பதாக உறுதி கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக்கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சீனிவாசன், வருவாய் துறை அலுவலர்களும் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளாததால், காவல்துறையினர் குண்டுகட்டையாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.