தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலை அறிவித்த தேதியில் நடத்துவதற்காக மாநிலத் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால், திமுகவினர் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என கேள்விக்குறியுடன் நீதிமன்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 526 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் மூவாயிரத்து 300க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் கிராம பகுதி பிரமுகர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். கடந்த இரு தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காட்டில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் காலை முதல் 20க்கும் மேற்பட்டோர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் பணி சூடுபிடித்துள்ளது.
திருவள்ளூர் ஒன்றியத்தில் சிவன் வாயில் பகுதியில் மணி என்பவரும் கரிகலவாக்கம் கிராமத்தில் கயல்விழி மற்றும் புட்லூர் ஊராட்சியில் லோகம்மாள் மற்றும் பப்பி ஆகியோரும், மேலக் கொண்டையார் ஊராட்சியில் முரளி என்பவரும் தலைவர் பதவிக்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மேட்டுப்பாளையம் விபத்து போல் கோவையில் நடந்து விடக்கூடாது' - எச்சரித்த திமுக எம்எல்ஏ