திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை இறைவணக்கம் முடிந்ததும் தனது அறைக்குச் சென்ற மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலின் பேரில் மப்பேடு காவல் துறையினர், பள்ளிக்கு நேரில் சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் எஸ்.பி.பெகர்லா செபாஸ் கல்யாண், பள்ளி விடுதியில் விசாரணை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி., “மாணவி இறப்பு குறித்து சக மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் விடுதி காப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவியின் சந்தேகத்திற்கு இடமான இறப்பு குறித்து பெற்றோர் தரும் புகாரையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, திருவள்ளூர் சிபிசிஐடி விசாரணை அலுவலர் திரிபுரசுந்தரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் கூடுதலாக சென்னை சிபிசிஐடி அலுவலர்களும், சிபிசிஐடி விசாரணை அலுவலர் திரிபுரசுந்தரி தலைமையில் பள்ளி மற்றும் விடுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!