விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு சராசரியாக 876 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் இப்பகுதி விவாசயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்த நிலையில் இந்தாண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததால் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து குடிநீர் பிரச்னை நிலவிவந்தது.
தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி கடந்த சில தினங்களாக அவ்வப்போது இரவில் மழை பெய்து வந்தது. பின் இடி மின்னலுடன் பலத்த மழை பொழிய தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்குச் செல்லக்கூடிய கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கொசஸ்தலை ஆற்றில் உள்ள முட்செடிகள் மற்றும் தேவையில்லாமல் வளரக்கூடிய செடிகளை அப்புறப்படுத்தினால் தண்ணீர் வேகமாகச் செல்லும். முறையாக தூர்வாரினால் தண்ணீரைச் சேமிக்க முடியும்’ என்கின்றனர்.