திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், நலிவுற்ற மக்களுக்கு சிறப்பு உதவி செய்வது குறித்து பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது ஊரகத் தொழில்கள் மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் நலிவுற்ற மக்களை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்திற்கு ரூபாய் 300 கோடியில் கரோனா சிறப்பு நிதி உதவித் தொகை திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் மே 25ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அந்த சிறப்பு நிதி உதவி தொகுப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூபாய் 13.66 கோடி மதிப்பில் 8,015 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆயிரத்து 584 நபருக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபாய் 50,000 என்ற அடிப்படையில் மொத்தம் ரூபாய் 7.92 கோடி நீண்டகால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.
இதுகுறித்து தாலுகா ஆபீஸ் ரோடு, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய முகவரிகளில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.