திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கடந்த சில வாரங்களாக வேகமாகப் பரவிவருகிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காய்ச்சலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
அதன்படி, கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி கபிலர் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளின் தன்மை குறித்தும் அதை துரிதப்படுத்துவது குறித்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, அங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்போம். வீடுகளில் இருக்கும் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றை அகற்றி கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்போம் என மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றார். பின்னர் மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும்போது, ”வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. காய்ச்சல், தொற்று நோய்கள் பரவாமலிருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. காய்ச்சல் தடுப்புப் பணிகள், சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தோம். இங்கு காலி மனைகளில் குப்பைகளைக் கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். குப்பைக் கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'எங்க புள்ளைங்க மட்டும் நோய்வாய்ப்படுவது தலையெழுத்தா?' - குமுறும் திருவேற்காடு மக்கள்