திருவள்ளூர் மாவட்ட ஊரக வளச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று (அக்.16) பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, பூண்டி ஊராட்சி ஒன்றியம், அரியத்தூர் ஊராட்சி பகுதிகளில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்து, ஊராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுத்தியளிப்பு திட்டப் பணியாளர்களைக் கொண்டு மரம் நடும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அரியத்தூர் ஊராட்சி, நயப்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட சிறுபாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் விரிவான பள்ளி கட்டட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 13.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளிக் கட்டடம், 8.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், ராமநாதபுரம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் ஊராட்சியில் உள்ள 288 வீடுகளுக்கு 65.57 லட்சம் மதிப்பிலான குழாய்கள் வழியாக வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் லோகநாயகி, பூண்டி ஒன்றியக் குழு அதிமுக தலைவர் வெங்கட்ரமணா மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.