திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இன்று ஆவடியில் நான்கு பேருக்கும், அயப்பாக்கம் பகுதியில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதன் காரணமாக, இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பேரம்பாக்கம் ஊராட்சி கரோனா பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் வைக்கப்பட்டிருந்த நபர்களுக்கு அவ்வப்போது வைரஸ் தொற்று ஏற்படுவதாக அறிவித்து அவர்கள் சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், அப்படி மாற்றம் செய்பவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்தும்விதமாக ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்களின் சிரமத்தைப் போக்கும்வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு: அரசு அறிவித்த தளர்வுகள், விதிமுறைகள் என்ன?