திருவள்ளூர்: சென்னையைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசிவந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து அறிமுகமான மூன்றாம் நாளே காதலனைத் தேடி அந்த 17 வயது சிறுமி திருவள்ளூருக்கு வந்துள்ளார்.
அங்கு அவரைச் சந்தித்த காதலன் அச்சிறுமியை திருப்பாச்சூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து மனவேதனையுடன் திரும்பிச் சென்ற சிறுமி சில தினங்கள் கழித்து தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ராதேவி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து, சிறுமியின் காதலனான சத்தியவாணி(17)யை கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சத்தியவாணியுடன் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான இளைஞரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மைனர் பெண்ணிற்கு திருமணம் - மணமகன் உள்பட மூவர் கைது