திருவள்ளூர்: மாவட்டம் முழுவதிலும் மக்கள் சிறப்பாக போகி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைவரும் போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கரோனா 2020ஆம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களையும் மிகுந்த சோதனைக்கு ஆளாக்கியது. அதனால் கரோனா என்ற கொடிய நோய் இத்தோடு ஒழிய வேண்டும் என்றும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் இந்த ஆண்டு அனைத்து தரப்பு மக்களும் நோய் நொடியின்றி புத்துணர்வோடு வாழ ஆண்டவன் வழி செய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டிக் கொண்டனர்.
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக குறிப்பிடுகிறார்கள். இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போகி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்துமுடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.
வீட்டிலுள்ள பழைய, தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வீடு சுத்தமாக்கப்படும்.
இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி, வீட்டை மட்டுமல்லாது, மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.