திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த தும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பருத்திமேனி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உடல் நலக் குறைவு, வயதுமூப்பு காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய ஆரணியாற்றின் நடுவே சுடுகாடு அமைந்துள்ளது. மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும், ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கி சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக பருத்திமேனி கிராமத்தைச் சேர்ந்த மோகனா என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக
உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆரணியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆற்று தண்ணீரில் மிகுந்த சிரமத்துடன் சடலத்தை சுமந்தபடி சுடுகாட்டிற்குச் சென்று இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.
ஆற்றங்கரை ஓரங்களில் அல்லது அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு அமைத்து தருமாறு அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும், அலுவலர்கள் செவி சாய்க்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் ஆபத்தான முறையில் தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்று இறுதிச்சடங்கு செய்யும் அவலம் நீடித்து வருகிறது.
உடனடியாக தமிழ்நாடு அரசு செவி சாய்த்து தங்களுக்கு நிரந்தரமான மயானத்தை அமைத்து அதற்குப் பாதை அமைத்து தர வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: டிச.7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!